18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் புதிய சாதனை...!
’’தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது’’
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து வன பகுதிகளை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்த முதலில் தயக்கம் காட்டிய நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினரின் தொடர் முயற்சி காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனிடையே நூறு சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடையும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காட்டிய நிலையில், இந்த உத்தரவினால் மது பிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் நீலகிரில் உள்ள 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறும் போது, “நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 இலட்சத்து 24 ஆயிரத்து 748 பேர். அதில் 18 வயதுக்கும் மேல் 5 இலட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 760 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில், அதிகம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீலகிரியில் முதல் தவணை தடுப்பூசி 5 இலட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இலக்கு எட்டப்பட்டுள்ளது. 6,277 பேருக்கு கொரோனா பாதித்து உள்ளதால், 3 மாதங்களுக்குப் பின் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் 3 மாதங்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு நீலகிரிக்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்கியதால், இந்த இலக்கை அடைய முடிந்தது. இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்ட சுகாதாரத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்று அசத்தியுள்ளது.