பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ; மைவி 3 ஏட்ஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
மைவி 3 ஏட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்த், விஜய ராகவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது.
பாமக நிர்வாகிக்கு மிரட்டல்
இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக பாமக கோவை மாவட்டச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மைவி 3 ஏட்ஸ் நிறுவனத்தின் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமகவினர் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக அசோக் ஸ்ரீ நிதி அந்த நிறுவனத்திற்கு எதிரான புகார்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி யை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர் மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மீது நீங்கள் அளிக்கும் புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான செல்போன் உரையாடல் பதிவு ஒன்றும் வெளியானது.
இந்த கொலை மிரட்டலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்த நபர், நிறுவனம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அசோக் ஸ்ரீநிதி மீது கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீ நிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மைவி 3 ஏட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்த், விஜய ராகவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.