’முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவை வழிநடத்த தகுதிவாய்ந்தவர்’ : அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?
”நமது அடுத்த இலக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலாக இருக்க வேண்டும்.தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருக்க வேண்டும்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகின்ற 14-ஆம் தேதி, கோவைக்கு வருகை தர உள்ளார். 15-ஆம் தேதியன்று கொடிசியாவில் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பிலும், ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பலகட்ட பணிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தை ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற 14 முதல் 16 ம் தேதி வரை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சருக்கு வழியெங்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக 96 விழுக்காடு என்ற மகத்தான வெற்றியை பெற்றது. நமது அடுத்த இலக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சராக நமது தலைவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அவரின் ஆட்சியை இந்தியா முழுவதற்கும் தர வேண்டும். அந்த அளவிற்கு தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருக்க வேண்டும். சிலர் கோவை, பொள்ளாச்சியில் கூட்டம் நடத்தி விட்டு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
கோவை கலைஞரின் கோட்டையாக இருந்தது. தற்போது முதலமைச்சரின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிக்கு உழைக்க வேண்டும். ஒரு பூத்துக்கு 25 பேரை மாற்றுக்கட்சியினரை சேர்க்க வேண்டும். அதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் கட்சியில் இணைவதை உறுதி செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக முதலமைச்சர் கோவையில் பிரச்சாரத்தை துவங்கினார் எனும் அளவிற்கு வரவேற்பு இருக்க வேண்டும். முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒராண்டு காலத்திற்குள் பல முறை கோவைக்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சர் இதயத்தில் கோவைக்கு தனி இடம் உள்ளது. தொழில் முனைவோரிடம் நேரடியாக 3 மணி நேரம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அடித்தளம் அமைக்க வேண்டும். சில பேர் சில கருத்துகளை சொல்லி வருகின்றனர். முதலமைச்சர் மலை. சிலர் மடு. மலையோடு மோத மடுவினர் நினைக்கிறார். அதற்காக சொல்லி வரும் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் வழியில் முதலமைச்சரை சந்தித்து கைகளை உற்சாக குலுக்கி பேசினர். இந்தியாவை வழிநடத்த தகுதி வாய்ந்த தலைவர் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். நமக்குள் சங்கடம் இல்லாமல் முதலமைச்சருக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.