’சொத்துவரி தாமதமாக செலுத்துபவர்களுக்கு அபராத வட்டி விதிப்பது அமலுக்கு வரவில்லை’ - அமைச்சர் முத்துசாமி
கோவை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 1 சதவீத அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க சொல்லலாம்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை வீட்டு வசதிவாரிய அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக காசோலைகள் வழங்கப்பட்டது.
கோவையில் விரைவில் முதலமைச்சர்:
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கோவை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது எனவும், தமிழக முதல்வரின் கள ஆய்வு விரைவில் கோவை உட்பட பல மாவட்டங்களில் இருக்கின்றது எனவும், அதற்குள் பல பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.
கடன் உதவி பெற 3 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து இருக்கின்றனர் எனவும், 20 வங்கிகள் இதில் பங்கு பெற்று இருக்கின்றனர் என கூறிய அவர், அனைவரும் இன்றைய தினமே கடன் தொகையை பெற இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். அடுத்த கட்டமாக வருகிற 10 ம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியிலுள்ள கற்பகம் கல்லூரியில் இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.
கல்வி கடன் தொகை:
மாணவர்கள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்வி கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறியதுடன், இதே போல காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை திட்டம், வேலை வாய்ப்பு முகாம் என நடத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், கோவையில் மருதமலை செல்லும் போது வாகன நெரிசல் ஏற்படுவதால் 2 மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என புகார்கள் வந்த நிலையில், அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது எனவும் கூறினார். கோவையில் 13 கோடி ரூபாய் மதிப்பினாலான திட்டங்கள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றது எனவும், தமிழக முதல்வர் வரும் போது புதியதாக பல திட்டங்கள் கேட்டு பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கோவையில் போக்குவரத்து நெரிசல்களை தீர்க்க அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அபராத வட்டி:
கோவை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 1 சதவீத அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க சொல்லலாம் எனவும் கூறிய அவர், அதே வேளையில் வரிகளை சீக்கிரம் செலுத்தி விட்டால் அபராத வட்டி விதிப்பை தவிர்த்து விடலாம். வரிகளை முன்னதாக செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு கவனம் செலுத்த சொல்லலாம் எனவும் தெருநாய்,கால்நடை போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் நீதிமன்ற உத்திரவுபடி செயல்பட வேண்டி இருக்கிறது எனத் தெரிவித்தார்.