'தமிழகத்தில் RTPCR சோதனைகள் அதிகரிக்கப்படும்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 4000 பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தலாம் என்ற பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ”மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரொனா பேரிடர் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6050 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 273 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்று வருகின்ற 10,11ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் மாக் ட்ரில் நடத்தப்பட உள்ளது. பேரிடருக்கு தேவையான படுக்கை வசதிகள் மருந்து கையிருப்பு ஆக்சிஜன் இருப்பு ஆகியவை இதன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு சதவிகிதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னாள் வரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு பாதிப்பு என இருந்து வந்த நிலையில் தற்போது தினம்தோறும் 10, 20 என்கின்ற அளவில் உள்ளது. எனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு Rtpcr பரிசோதனை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 1000 படுக்கைகள் தயார் நிலையிலும், அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 PSA பிளாண்ட்டுகளும், 2067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் சேமிப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. எனவே ஆக்சிஜன், படுக்கைகள், மருந்து கையிருப்பு என அனைத்தும் 100% முழுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 4000 பேர் வீதம் RTPCR பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி போன்ற பாதிப்புகளுடன் வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். எனவே முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 4000 பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தலாம் என்ற பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது வருகின்ற பாதிப்புகள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றாலும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம். இணை நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தங்களை தற்காத்து கொண்டு பொது இடங்களில் முக கவசங்கள் அணிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டை விட 10 மடங்கு கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்புகளிலும் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கொள்ளுங்கள். தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் அது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் இன்ஃபுளியன்சா காய்ச்சல் முகாம்கள் 52,568 முகாம்கள் நடத்தப்பட்டு 21 லட்சத்து 5000க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு தலைமை மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை என்றால் தெரிவியுங்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
25,26 ம் தேதி எம்.ஆர்.பி தேர்வு நடைபெறுகிறது அதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் காலி பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் இங்கிருந்து அனுப்பி இருக்கிறார். குடியரசுத் தலைவர், ஒன்றிய சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை ஆகியவற்றின் வாயிலாக தமிழ்நாட்டிற்கு ஒரு சில விளக்கங்கள் கேட்டு உள்ளார்கள். நாமும் அதற்கான விளக்கங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறோம். எனவே இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அநேகமாக 10, 15 நாட்களில் முடிந்து விடும். அதன் பின்பு முதலமைச்சர் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )