கோவை : 60 சதவீதம் கொரோனா பரவல் குறைந்துள்ளது - அமைச்சர் கே.என் நேரு
அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தற்போது கோவையில் 60 சதவீதம் வரை கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என்று அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார்
கோவையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக 60 சதவீத கொரோனா பரவல் குறைந்துள்ளது என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடிக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் முதல் முறையாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் 100 தற்காலிக செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு முறை கோவைக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கோவையில் 60 சதவீதம் வரை கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. 40 சதவீதம் என்றளவில் கொரோனா பரவல் உள்ளது. கரும்பூஞ்சை நோய்க்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் கொரொனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக்கட்டணம் வசூல் செய்வது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க காவல் துறைக்கு அறிவுறுத்தபட்டு உள்ளது. கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், அத்திட்டப் பணிகளை பார்வையிடவுள்ளேன். சூயஸ் திட்டத்தை ரத்து செய்வது என்பது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். தமிழ்நாட்டிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடித்தாகிவிட்டது. தற்போது மீண்டும் உலாகளவிய டெண்டர் விட்டுள்ளோம். தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெறும். கிராம அளவில் தடுப்பூசிகள் போட ஆலோசணை செய்யப்பட்டது. மாநகராட்சியில் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியது உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மட்டுமே அரசு முழு கவனம் செலுத்திவருகிறது" என தெரிவித்தார்.