மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின்
பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்களுடன் உரையாடினர்.
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு முன்னறிவிப்பு இன்றி திடீரென பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்களுடன் உரையாடினர். அப்போது நீண்ட மாத கால இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை வாழ்த்திய அமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை கண்டு உரையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த உதயநிதி ஸ்டாலினை நேரில் பார்த்ததால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2,064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 இலட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் 19 மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்புகள், மலர்கள், பலூன்கள் உள்ளிட்டவை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று திறக்கப்பட்ட பள்ளிகளில் வகுப்புகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர். இன்று திறக்கப்படும் பள்ளி வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களின் விருப்பம் இருந்தாலே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையவழி கல்வி முறையும் தொடரப்பட உள்ளது.