நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
கல்லாறு - ஹில்கிரோவ் இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன.
கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாநகரப் பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்
நேற்றைய தினம் கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியில் 17 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. கோவை விமான நிலையம் பகுதியில் 4.1செ.மீ, தொண்டாமுத்தூர் பகுதியில் 5 செ.மீ, பொள்ளாச்சி ஆழியார் அணைப்பகுதியில் 5.1 செ.மீட்டர் மழைபதிவாகியுள்ளது. இதே போல நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பர்லியார் பகுதியில் 7.8 சென்டிமீட்டர், கின்னகோரை பகுதியில் 6.4 சென்டிமீட்டர், கோத்தகிரியில் 6.4 சென்டிமீட்டர் , கீழ் கோத்தகிரியில் 8.1 சென்டிமீட்டர், தேவாலா குதியில் 6.2 சென்டிமீட்டர், பந்தலூர் பகுதியில் 6.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குப் பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை நீலகிரி மாவட்டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மலை ரயில் சேவை இரத்து
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு - ஹில்கிரோவ் இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலை இரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு தொகை முழுகையாக திரும்ப வழங்கப்படும் என இரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை இரயில் இரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 3 நாட்களுக்கு நீலகிரி பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரியில் மீட்பு பணிகளுக்கு 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 456 நிவாரண மையம், 25 தீயணைப்பு வாகனங்கள், 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 100 ஜே.சி.பி.கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள நிறைமாத கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது., நியாய விலை பொருள்கள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல மழையால் பாதிக்கப்பட்ட கூடிய நியாய விலை கடைகளை உயரமான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படக்கூடும் எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை பாதிப்பு குறித்த தகவலை பகிர கட்டணமில்லா 1077, 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.