கோவையில் திமுக மேயராக பரப்புரை செய்த மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பு மறுப்பு - வீணான தேர்தல் பரப்புரை
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வேட்பாளர் பட்டியல் வரும் முன்னரே தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, மீனா ஜெயக்குமார் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தற்போது வரை 20 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு வார்டும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 74 வார்டுகளில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதனிடையே கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 74 பேர் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதா சேனாதிபதிக்கு 97 வது வார்டில் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி 52 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் வேட்பாளர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மீனா ஜெயக்குமார் பெயர் விடுபட்டுள்ளது.
திமுகவில் மேயர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட திமுக மகளிரணி துணைச் செயலாளரான மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே திமுக கூட்டங்களில் மீனா ஜெயக்குமார் தான் மேயர் வேட்பாளர் என சொல்லப்பட்டு வந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தவறாது மீனா ஜெயக்குமார் பங்கேற்று வந்தார். திமுகவினர் மீனா ஜெயக்குமாரை மேயர் வேட்பாளராக கருதி உரிய மரியாதை அளித்து வந்தனர்.
இதனிடையே மீனா ஜெயக்குமார் 57 வது வார்டில் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வேட்பாளர் பட்டியல் வரும் முன்னரே அப்பகுதியில் தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, மீனா ஜெயக்குமார் ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, அவரது ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேட்பதற்காக மீனா ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.