பெட்டிங் செயலி.. பகீர் தகவல்கள்.. கோவையில் நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது..!
பெட்டிங் செயலி மூலமாக பணத்தை இழந்ததால் அதிகமாக கடன் தொல்லை ஏற்பட்டதும், கடன்களை அடைக்க தனது காதலி தேஜஸ்வினி உடன் இணைந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். 65 வயதான இவர் கடந்த 28 ஆம் தேதியன்று தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகேயுள்ள சுடுகாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி 20 வயது பெண் ஒருவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அவருக்கு பின்னால் 20 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் அமர்ந்து வந்துள்ளார். இருவரும் மூதாட்டி காளியம்மாளை அழைத்து, முகவரி கேட்பது போல் கழுத்தில் இருந்த சுமார் 5½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் இரு சக்கர வாகனத்தின் பதிவெண் மூலம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதனடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்ற 20 வயது இளைஞர், அவரது காதலியான மேற்கு சுங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்த 20 வயதான தேஜஸ்வினி ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரசாத் மற்றும் தேஜஸ்வினி ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள பச்சைபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிரசாத் பி.டெக் ஐ.டி. படித்து வருவதும், பிரசாத், தேஜஸ்வினி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு பணம் அடிக்கடி தேவைப்படுவதாலும் மற்றும் பிரசாத் ஆண்ட்ராய்ட் மொபைலில் பெட்டிங் என்ற செயலி மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் அதிகமாக கடன் தொல்லை ஏற்பட்டதும், கடன்களை அடைக்க தனது காதலி தேஜஸ்வினி உடன் இணைந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரசாத் மற்றும் தேஜஸ்வினி ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 சவரண் தங்க நகையினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார். நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.