![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: கோவையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது - 1.61 இலட்சம் பணம் பறிமுதல்!
லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ரூ.1.61 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
![Crime: கோவையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது - 1.61 இலட்சம் பணம் பறிமுதல்! Lottery selling gang arrested in Coimbatore one lakh rupees seized Crime: கோவையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது - 1.61 இலட்சம் பணம் பறிமுதல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/4ee2a330e741c2462b2bd9a3cf45eb911717141954105188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல் துறையினர் ரூ.1.61 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே துடியலூர் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஸ்கோடா வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வாகனத்தில் வந்த நான்கு பேரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தில் வைத்து இருந்த 96 லாட்டரிகள், 5 லேப்டாப்கள், 9 செல்போன்கள் மற்றும் ரூபாய் 1 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வங்கிக் கணக்கு முடக்கம்
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் துடியலூர் அருகே உள்ள ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (39), பிரதீப் (34), நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதிஷ் கண்ணா (28) மற்றும் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பது தெரிய வந்தது. இதில் வினோத்குமார், பிரதீப் ஆகியோர் மீது லாட்டரி விற்பனை செய்ததாக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், இவர்களுடன் பிரபு என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீதும் 5 பிரிவுகளில் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வினோத் குமார், பிரதீப், ஆதிஷ் கண்ணா மற்றும் சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான பிரபு என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். லாட்டரி விற்பனை மூலம் பெறப்பட்ட பணம் பிரபு என்பவரது வங்கி கணக்கில் இருந்த 18 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை காவல் துறையினர் முடக்கியுள்ளனர். கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வந்த கும்பல் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருந்தது காவல் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)