வால்பாறையில் கொடூரம்! 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை.. தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
வால்பாறையில் 4 வயது சிறுமியை தாய் கண்முன்னே தாக்கி சிறுத்தை இழுத்துச் சென்ற கொடூரம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது வால்பாறை. நீலகிரி மாவட்டத்தைப் போல இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டம் நிறைந்த பகுதி இதுவாகும். ஆனால், இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் என்பது அதிகளவில் காணப்படுகிறது. இந்த சூழலில், அங்கு தாயின் கண் முன்பே சிறுத்தை 4 வயது சிறுமியை கவ்விச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
சிறுமியை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை:
வால்பாறையில் உள்ள பச்சைமலை எஸ்டேட். இங்கு உள்ளது காளியம்மன் கோயில் அருகே தொழிலாளர் குடியிருப்பு உள்ளது. இங்கு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பலரும் வசித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோனிகா.
இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரோஷிணி என்ற மகள் உள்ளார். அந்த சிறுமி வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்றும் மாலை வீட்டின் முன்பு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தின் அருகே சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்தது.
தாய் கண்முன்னே நடந்த கொடூரம்:
அந்த சிறுத்தை திடீரென சிறுமி மீது பாய்ந்தது. சிறுமி மீது பாய்ந்த சிறுத்தை ரோஷிணியை கவ்விப்பிடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது. இந்த கொடூர சம்பவம் ரோஷிணியின் தாய் முன்பே நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த சிறுமியின் தாய் மோனிகா தேவி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.
மோனிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அங்கு ரோஷிணி அணிந்திருந்த ஆடை மட்டுமே சிறுத்தை கவ்விச் சென்றபோது தவறி கீழே விழுந்திருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் மக்கள் தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று இரவு முழுவதும் பொதுமக்களும், வனத்துறையினரும் தேயிலைத் தோட்டம் முழுவதும் தேடினர்.
பெரும் சோகம்:
தற்போது வரை மாயமான சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிறுமியின் நிலை என்ன? சிறுமி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சோகமான பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வனத்துறை, காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் சிறுமியை தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியின் 4 வயது மகளை சிறுத்தை கவ்விக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















