ஜன்னலில் தூக்கு; முட்டிபோட்ட நிலையில் சடலம் : பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்
காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றை கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.
கோவையில் பெண் காவலர் மகாலட்சுமி ஜன்னலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. 25 வயதான இவர் கோவையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் மகாலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். நீண்ட நேரமாக மகாலட்சுமி தொலைபேசி அழைப்பை ஏற்காததால் காவலர் அருண் உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்தபோது, மகாலட்சுமி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றைக்கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய பந்தயசாலை காவல் துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வீட்டு ஜன்னலில் தூக்கு போட்டு இறக்க வாய்ப்பில்லாத நிலையில், காவலர் மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “மகாலட்சுமி தற்கொலை செய்துகொள்ள கூடியவர் கிடையாது. தைரியமான பெண். காவலர் அருணை காதலித்த நிலையில், அருணின் பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனினும் அருண் தொடர்ந்து மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் உள்ளது. பந்தய சாலை காவல் துறையினர் மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து மகாலட்சுமி மற்றும் அருண் ஆகிய இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, பந்தய சாலை காவல் துறையினர் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050