Kodanad Case: மீண்டும் விசாரணைக்கு வருகிறது கோடநாடு வழக்கு.. - முக்கியத்துவம் என்ன?
கோடநாடு கொலை வழக்கு உதகை நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
![Kodanad Case: மீண்டும் விசாரணைக்கு வருகிறது கோடநாடு வழக்கு.. - முக்கியத்துவம் என்ன? kodanadu case investigation to be held at nilgiris court after the case transferred to cbcid Kodanad Case: மீண்டும் விசாரணைக்கு வருகிறது கோடநாடு வழக்கு.. - முக்கியத்துவம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/02/cbcf2d5c0e9305d4b3ac133a9e2ffc991669945013802589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு கொலை வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சீல் வைக்கப்பட்ட கவர்களில் வைத்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை காவல் துறையினர் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்களின் நகல்கள் சிபிசிஐடி காவல் துறையினரிடம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விரைவில் விசாரணையை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போது சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர் உள்பட 49 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரும் காலங்களில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கோவைக்கு வர முடியாத சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் இருந்தால் மட்டும் நீலகிரியில் விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் இன்றைய விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)