கோவையில் 20 ஏக்கர் பரப்பளவில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்..எங்கு தெரியுமா?
கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டுமென்பது கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பொறுப்பு அமைச்சராக இருந்த டி.ஆர்.பி. ராஜா, கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கடந்த சில நாட்களாக, கோயம்புத்தூர் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்தபோது, விளையாட்டுகளில் ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை மக்களின் ஆர்வம் ஈடு இணையற்றது.
தேர்தல் வாக்குறுதி
”கோவை மூன்று டிஎன்பிஎல் அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாகவும் கோவை உள்ளது. மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் மேற்கு தமிழ்நாட்டைச்சை சேர்ந்தவர்கள். கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய ஊக்கம் தேவை. இதனை நமது இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக உருவாக்கி வருகிறார்.
கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறமைகள் மற்றும் தமிழகத்தில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டித் தரவேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
பின்னர் அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வாக்குறுதியை அளிக்கின்றேன்.
சென்னையில் உள்ள சின்னச்சாமி மைதானத்தினைப் போல் கோவையிலும் உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
மைதான இடம் தேர்வு
இதனிடையே கடந்த 14 ம் தேதி கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை பகுதியில், கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் சேலம் - கொச்சின் புறவழிச்சாலைக்கு அருகேயுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை பகுதியில் மொத்தம் உள்ள 20.72 ஏக்கர் பரப்பளவு நிலத்தை, விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிலமாறுதல் செய்து தீர்மானம் நிறைவேற்றி தருமாறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளருக்கு கோவை தெற்கு வட்டாச்சியர் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இது கோவையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.