தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்
13 வது நாளாக தொடரும் டி 23 புலி தேடுதல் வேட்டை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை, கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை கூட்டம் உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றி வரும் டி23 புலியைத் தேடும் பணிகள் 13 வது நாளாக நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
டி 23 புலியின் முதன்மை உணவாக மனிதன் இல்லை என்பதால், இப்புலி ஆட்கொல்லி இல்லை என தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். புலியை பிடிக்கும் பணிகள் அறிவியல் ரீதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வருகின்ற 20ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட 9 பேரும் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூர் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் விழுந்தன.
கோவை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கோவை மாவட்டத்தில் 6 கிராமங்களில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜாகீர் நாய்க்கன்பாளையம், காரடமை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையம், நெல்லித்துறை, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியாம்பாளையம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லீலா ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 5 தனியார் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய பவானிசாகர் வனவர் பெருமாள் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்ற நிலையில், கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி விரட்டினர். காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பண்ணை உரிமையாளர் சேகர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 76 இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.