'செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உருக்கம்
செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் நாடாளுமன்றத்தில் என்னை அறிமுகம் செய்வதை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் அமளி ஏற்படுத்தி தடுத்தனர்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை இன்று கோயம்புதூர் மாவட்டத்தில் உள்ள வடகோவை அருகேயுள்ள காமராஜபுரம் பகுதியில் துவக்கினார். இந்த யாத்திரை கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்.முருகனுக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், "சாதாரண ஏழை, செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க. தமிழகத்தில் எந்த கட்சியும் செய்யத் துணியாததை செய்ததது பாஜக தான். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் எந்த சமுதாயத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஆகவில்லையோ, அந்த சமுதாயத்தில் இருந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உறுப்பினர் இல்லாத என்னை முதல் முறையாக அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. நான் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆனால் என்னை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அதனைத் தடுக்க முயன்றனர்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. 8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் பாரதம் மூலம் 5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர்.
சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார். இந்த மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 28 அமைச்சர்கள் உள்ளனர். நலத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது" என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கூட்டத்தில் பங்கேற்கின்றேன். மக்கள் ஆசி யாத்திரை இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது. யாத்திரை முழுவதும் மக்களை சந்திக்கின்றோம். சாதாரண, ஏழை விவசய குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி இருக்கின்றனர்.
பட்டியல் இனத்தை சேர்ந்த, எந்த அவையிலும் உறுப்பினர் இல்லாத ஒருவர் அமைச்சராக இருப்பது இதுவே முதல் முறை என நினைக்கின்றேன். சமூக நீதியை போற்றுவதில் பா.ஜ.கவிற்கு ஈடு இணை கிடையாது. சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எங்களை, பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பார்கள் என ஆர்வத்துடன் இருந்தோம். ஏழை, எளிய, பட்டியல் இனத்தை எங்களை அறிமுகம் செய்து வைக்க கூடாது என கெட்ட எண்ணத்தில் அவையில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்கட்சியினர் பிரச்சினையை கிளப்பி அறிமுகம் செய்து வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர்.
75 ஆண்டுகளில் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களை ஏன் அறிமுகம் செய்து வைக்க விடவில்லை. நாடாளுமன்ற மாண்பை குறைத்தது எதிர்கட்சிகள். கொரோனா விதிகளின் படியே கூட்டம் நடத்துகின்றோம். முதல்வர் நிகழ்விலும் கூட இப்படி கூட்டம் இருக்கின்றது. பத்திரிகை சகோதரர்களுக்கும் என்னை போன்ற பட்டியல் இனத்தவர் அமைச்சரானது பிடிக்க வில்லையோ என தோன்றுகின்றது. பெகாசஸ் என்று இல்லாத ஒன்றை பெரிதாக்குகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த சோதனையை சட்டப்படி எதிர்கொள்வார். திமுக நூறுநாள் ஆட்சியில் சொன்னதை செய்யவில்லை. 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்ன அறிவிப்பை நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் குறித்த அறிவிப்பு இல்லை. சாத்தியம் இல்லாதவற்றை சொல்லி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக இருக்கின்றது.
கொங்குநாடு விவகாரம் மக்கள் நிலைப்பாட்டை பொறுத்து இருக்கும். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்கின்றனர். சர்வதேச அளவில் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும். அனைத்து சாதியை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்கள் ஆவது புதிதல்ல. பல கோவில்களில் இருக்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.