கோவையில் அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்; சீர்வரிசை தந்து அசத்தல்
அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.70 இலட்ச மதிப்பிலான 8 வகுப்பறைகள் புதிய கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது.
![கோவையில் அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்; சீர்வரிசை தந்து அசத்தல் Former students who built a new building for a government school in Coimbatore TNN கோவையில் அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்; சீர்வரிசை தந்து அசத்தல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/4e3441d6ddaa5e708379912115be260d1689408000746188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை வெள்ளலூர் அரசுப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்டித் தந்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து கொடுத்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 1961 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளியின் வைரவிழா ஆண்டை அப்பள்ளியில் 1970 களில் பயின்றவர்கள் முதல் அண்மையில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் காமராசரின் பிறந்த நாள் அன்று பள்ளியின் வைர விழா கொண்டாடப்பட்டது.
அப்பள்ளியில் இருந்து பழைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், அக்கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.70 இலட்ச மதிப்பிலான 8 வகுப்பறைகள் புதிய கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதிரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதற்கு முன்னதாக மைதானம் என்ற இடத்தில் ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள் மேளதாளம் முழங்க பள்ளிக்கு தேவையான பீரோ, டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலாக பள்ளி வரை கொண்டு வந்து தந்தனர். பள்ளியை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் புதிய வகுப்பறை கட்டித் தந்து, தேவையான பொருட்களை கொடுத்ததாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் கடந்த 60 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து பேசியதும், அவர்களுடான நினைவுகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளியின் நினைவுகளை நினைவுகூறும் வகையில் அப்பள்ளி குறித்த கதைகள், கவிதைகள் உள்ளிட்டவை இடம்பெறும் வைர விழா ஆண்டு புத்தகத்தையும் வெளியிட முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய வகுப்பறை கட்டித் தந்து தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)