கோவை : பல மாத உழைப்பே வீண்! விலையில்லை.. கூடைகூடையாக குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி!
கடந்த சில மாதங்களாக தக்காளி 15 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று இந்த ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாததால், விவசாயிகள் குப்பையில் கொட்டி விட்டு சென்றனர்.
தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் கோவை மாவட்டம் பெரும்பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் தக்காளிகள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து தக்காளிகளை விவசாயிகளிடம் விலைக்கு வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தக்காளியினை வியாபாரிகள் அனுப்பி வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக தக்காளி 15 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று இந்த ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது. மேலும் இன்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகாமல் அப்படியே தேங்கிக் கிடந்தது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளியினை குப்பையில் கொட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”ஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்ய, களை எடுக்க, உரம், மருந்து தெளிக்க ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தற்போது தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக, மிகவும் குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கும் கீழ் சென்றதால், வியாபாரிகளும் தக்காளிகளை வாங்க வரவில்லை.
விளைச்சல் அதிகம் என வியாபாரிகள் காரணம் கூறி தக்காளியை குறைவான விலைக்கு கேட்கின்றனர். இதனால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை. உரிய விலைக்கு தக்காளி விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் தக்காளிகளை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுள்ளனர். இதனால் தமிழக அரசு தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர். தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்ற சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்