![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவை : கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், சாலைகளில் தேங்கிய மழை நீர், மக்கள் அவதி..
லட்சுமி மில்ஸ், பந்தயசாலை, ராமநாதபுரம், கணுவாய் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
![கோவை : கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், சாலைகளில் தேங்கிய மழை நீர், மக்கள் அவதி.. Due to the heavy rains floods entered the houses and rain water stagnated on the roads in Coimbatore கோவை : கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், சாலைகளில் தேங்கிய மழை நீர், மக்கள் அவதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/29/6a65dbf74e2401b75ea678643cde5a781661778459885188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதோடு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் பரவலாக கனமழை பெய்தது. காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை கொட்டியது. இதன் காரணமாக லட்சுமி மில்ஸ், பந்தயசாலை, ராமநாதபுரம், கணுவாய் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள லங்கா கார்னர் பகுதி ரயில்வே தரைப்பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழைநீரில் நடந்து சென்றதால் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. மேலும் அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தடாகம் - மாங்கரை சாலையில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.
இந்நிலையில் வ.உ.சி. பூங்கா அருகே சாலையில் வெள்ள நீர் தேங்கிய நிலையில், ஒரு தனியார் உணவகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல புலியங்குளம் அருகேயுள்ள மசால் லே அவுட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிய அப்பகுதி மக்கள், தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். இதனிடையே மழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு மழை நீரோடு, கழிவு நீர் கலந்து சென்றதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)