கோவை தொகுதியை கமல்ஹாசன், சிபிஎம்முக்கு விட்டுத்தராத திமுக ; மகேந்திரனை களமிறக்க திட்டமா?
கோவை மக்களவை தொகுதியை திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இத்தொகுதியை திமுக தரவில்லை.
கோவை மக்களவை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தன.1952-ஆம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
கோவையை எதிர்பார்த்த கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். ஆனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். இதனால் மீண்டும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற கமல்ஹாசன் திட்டமிட்டு இருந்தார். அதற்கேற்ப கமல்ஹாசனும், மநீமவினரும் கோவை தொகுதியில் கவனம் செலுத்தி வந்தனர். கோவை அல்லது தென்சென்னை தொகுதியில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கமல்ஹாசன் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல், திமுக கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதனால் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2019 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பாரம்பரிய தொகுதியான கோவையில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்பியது. அதற்கேற்ப அக்கட்சி தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. கமல்ஹாசன் கோவையில் போட்டியில்லை என்பதால், அக்கட்சிக்கு கோவை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை தொகுதியில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மநீம, சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திமுக தொகுதியை விட்டுத்தரவில்லை.
திமுக போட்டியிட என்ன காரணம்?
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியாக இருந்த வந்த கோவை மக்களவை தொகுதியில், திமுகவே இந்த முறை போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. திமுக பலவீனமாக உள்ள கோவையில், கட்சியை பலப்படுத்த அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக களமிறக்கியது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் முத்துசாமியை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக திமுக தலைமை அறிவித்தது. ஆனால் அவரது செயல்பாடுகளும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில் கோவை தொகுதியை கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டு தந்தால் திமுக மேலும் பலவீனம் அடையும், கட்சி தொண்டர்கள் சோர்வடைவார்கள் என கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டுமென அக்கட்சி தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கோவையில் திமுகவின் முகமாக ஒருவரை உருவாக்கும் வகையிலும், கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும் திமுக கோவை தொகுதியில் போட்டியிடும் என கூறப்படுகிறது.
மகேந்திரனை களமிறக்க திட்டமா?
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட திமுகவினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் போட்டியிட வேண்டுமென திமுகவினர் சிலர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேசமயம் கோவை தொகுதியில் போட்டியிட திமுக ஐடி விங்க் இணை செயலாளர் மகேந்திரன் விருப்ப மனு அளித்து, நேர்காணலிலும் கலந்து கொண்டுள்ளார். பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் சண்முகசுந்தரம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், கோவை தொகுதியில் மகேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கோவை மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர் என்பதாலும், கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்ததாலும், தொழிலதிபர் என்பதால் தேர்தலில் தாராளமாக செலவு செய்ய வாய்ப்பு உள்ளதாலும் மகேந்திரன் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூரில் நா.கார்த்திக் தோல்விக்கு மகேந்திரன்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அவரது தரப்பினர் மகேந்திரனுக்கு வாய்ப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் நா.கார்த்திக்கிற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருவரும் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளதால், இருவரையும் தவிர்த்து கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் திமுகவில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும்.