(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : 'உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை தடுப்பதா?' - கோவை திமுக பொறுப்பாளருக்கு எதிராக கொந்தளித்த மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தீவிரமாக பணியாற்றி வந்த மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். மீனா ஜெயக்குமார் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதிருப்தியில் விலகி இருந்தவர், இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேச தொடங்கும் போது மீனாஜெயக்குமார், 'எனக்கு கூடுதலாக நேரம் வேண்டும்' என்று செந்தில் பாலாஜியிடம் கேட்டார். அப்போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். முக்கியமாக திமுக கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்தார் என பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசினார்.
மீனா ஜெயக்குமார் பேசுகையில், "எத்தனையோ மேடையில் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அப்போது எல்லாம் எனக்கு பேச தோணல. இப்போது நான் பேச வேண்டும் என வந்துள்ளேன். ஜெயித்து வந்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஜெயித்து வருவது அவ்வளவு எளிதல்ல. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பங்குண்டு. அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தவுடன், தலைவர் கோவைக்கு ஒரு நல்ல ஆம்பளையை அனுப்பி வைத்துள்ளார் என்று என் நண்பர்களுடன் கூறினேன். ஆம்.. உண்மையை தான் சொன்னேன். நாம பண்ணதை அவர் செய்துள்ளார். மனதில் இருப்பதை ஓபனாக பேசுவதால், பல இடங்களில் நான் பேசுவதில்லை. தன்மானத்தை உரசி பார்க்கும்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கும், மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கும் பெரிதாக பிரச்னை இல்லை. ஒரு இடத்தகராறில் தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்த முதல் ஆள். சமூகவலைதளம், ஊடகங்கள் மூலம் என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்பினார்கள்.
[tw]
உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை தடுப்பதா?
— Prasanth V (@PrasanthV_93) February 26, 2022
திமுக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கிற்கு எதிராக கோவை செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மீனா ஜெயக்குமார்
மேயர் கனவுடன் பணியாற்றிய மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை@abpnadu pic.twitter.com/PIY1ot6ECz
தீண்டத்தகாதவர்களை போல நடத்தினார். நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள் என்றெல்லாம் கூறினார். நானும் ஒரு பெண் தான். எனக்கும் வலிக்கும். எல்லோரும் மனிதர்கள் தான். உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கு வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என்று கொந்தளித்தார்.
மீனா ஜெயக்குமார் பேச்சால் கார்த்திக் அப்செட் ஆனார். ஒரு கட்டத்தில் மீனா ஜெயக்குமார் ஒருமையில் பேச கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ”எல்லோரும் இருக்கும் இடத்தில் தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம். உங்கள் பிரச்னைகளை என்னிடம் கடிதமாக கொடுங்கள்” எனக் கூறினார். தொடர்ந்து மீனா ஜெயக்குமார் தொடர்ந்து பேச முயற்சி செய்த போது, அவரை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.