‘என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான உதவிகளை காவல் துறை செய்யும்’ - டிஜிபி சைலேந்திர பாபு
"என்.ஐ.ஏ. அதிகாரிகளுடனான கூட்டம் நடந்தது. என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை காவல் துறை செய்யும்."
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த 19 பேருக்கு சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவையில் கடந்த 23 ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாநகர காவல் துறை துரிதமாக செயல்பட்டது. சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து தடயங்களை சேகரித்தது. அதில் இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.
6 குற்றவாளிகளை மிக துரிதமாக ஆதாரங்களை திரட்டி கைது செய்துள்ளனர். 5 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்து கொண்டுள்ளனர். இதில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி ஆதாரங்களை திரட்டி கைது செய்த காவல் துறையினர் பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் நேற்று பரிந்துரை செய்தார். உள்துறை செயலகம் இன்று என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளுடனான கூட்டம் நடந்தது. என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை காவல் துறை செய்யும். புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது. காவல் துறையினருக்கு கிடைக்கும் ஆதாரங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்போம். இவ்வழக்கில் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தியது தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளோம். என்.ஐ.ஏ. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர்கள் கைது செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் 5 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கியது தொடர்பாக ஜமேசா முபினின் உறவினரான உக்கடம் பகுதியைச் சேர்ந்த அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.