ஃபோன் நம்பர் வாங்கி பேசினார்.. பாலியல் தொல்லை கொடுத்தார் - கோவை மாணவியின் நண்பர் வைஷ்ணவ்
’யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேரை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. 11-ஆம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறொரு தனியார் பள்ளிக்கு மாறியுள்ளார். அந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் உடல்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மாணவியின் தாய் நிறைமதி, ”எனது மகள் 11 ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்தாள். பின்னர் அந்த பள்ளியை பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளிக்கு மாறினாள். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள்.
”மகள் தற்கொலைக்கு தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தி பாலியல் தொல்லை அளித்ததே காரணம். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது, வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்து மகள் தற்கொலை செய்து கொண்டாள். இப்போது அவரது நண்பர்கள் சொல்லித்தான் இது எனக்கு தெரியவந்தது” என அவர் தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் நண்பர் வைஷ்ணவ் கூறுகையில், ”மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் மகளிடம் போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் எனது தோழியும் பேசி வந்தார். பள்ளியில் தாமதம் ஏற்பட்டால் தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் என் தோழியை பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்” என அவர் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியை கூறுகையில், ”கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம் பெயர இருப்பதால், மாணவியின் குடும்பத்தினர் மாற்றுச்சான்றிதழ் கேட்டனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்துவிட்டோம். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை” என்றார். அதேசமயம் ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்த அவர், ”பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது” என்றார்.
’யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேரை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர். பாலியல் தொல்லை குறித்து அறிந்த போதும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050