கோவை குற்றாலம் இன்று திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மழை மற்றும் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதனிடையே மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கோவை குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்ததால், பொதுமக்கள் நலன் கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக கடந்த 14 ம் தேதி வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்