(Source: ECI/ABP News/ABP Majha)
'பீக் ஹவர் மின் கட்டண குறைப்பு ஏமாற்றம் அளிக்கிறது' - கோவை குறுந்தொழில் அமைப்பினர் வேதனை
பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிப்பதாக தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்த கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிப்பதாக தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்த கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மின் பயன்பாட்டை பொறுத்து 15% முதல் 25% வரை மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்கிங் கட்டணத்தை 50% வரை குறைக்கும் மின்வாரிய அறிவிப்பால் 7196.10 கோடி இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோவை ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய அவர், ”நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டணம் உயர்வு குறித்து அறிக்கை பேசினார். முதல்வர் ஸ்டாலின் மின் கட்டணம் பற்றி பேசியதில் எந்த பலனும் இல்லை. மின் கட்டண விவகாரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேச மறுப்பது ஏன்? மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்ச தொழில் முனைவோர் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சிறுகுறு தொழில் கூடங்கள் மற்றும் தொழில் முனைவோர் என பல லட்சம் பேர் உள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 1 லட்சத்தி 67 ஆயிரம் பேர் இருக்கின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி சம்பளத்துடன் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழில் கூடங்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தி உள்ளது. சிறுகுறு தொழில் அமைப்புகளை நசுக்கும் விதத்தில் தமிழக மின் வாரியம் செயல்படுகிறது. இதனை முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் கூடங்களில் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேசினால் முழுமையான தீர்வு கிடைக்கும். மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். எங்களுடைய முதல் கட்ட கோரிக்கை இரட்டிப்பு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். நாங்கள் அமைத்த சோலார் மின் உற்பத்திக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. அதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க எங்களுடைய தொழில் துறையினர் அழைத்து பேசவில்லை. அதிலும் மின் கட்டணத்தில் வந்து பணம் கேட்கின்றனர்.
சோலார் எங்கள் முதலீட்டில் எங்கள் நிறுவனங்களின் மீது எங்கள் சொத்தின் மீது கடனை பெற்று பொருத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் மின்சாரத்தை விற்பனை செய்யவில்லை. அரசு இதை ஊக்குவிக்காமல் யூனிட் ஒன்றுக்கு 1.53 பைசா வசூல் செய்வதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மற்றொரு பிரதான கோரிக்கை 430% உயர்த்தப்பட்ட டிமாண்ட் சார்ஜ் முற்றிலும் திரும்ப பெற வேண்டும். இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பியும் பல முறை தபால்களை அனுப்பியும் எந்த ஒரு அழைப்பும், அழைத்து பேசவில்லை. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தொழில் துறை மின் கட்டளை உயர்வுவை திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அவர்கள் மூலமாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம். மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால், வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.