Crime : கோவையில் போலீஸ் அதிரடி சோதனை ; கஞ்சா, நாட்டு துப்பாக்கி, லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
46 தனிப்படை குழுக்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில் 105 நபர்கள் கண்டறியப்பட்டு, அதில் கஞ்சாவுடன் பிடிப்பட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உட்கோட்டம் வாரியாக துணை கண்காணிப்பாளர் தலைமையில், 46 தனிப்படை குழுக்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில் 105 நபர்கள் கண்டறியப்பட்டு, அதில் கஞ்சாவுடன் பிடிபட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 28 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 நபர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 4 அவுட்டுகாய்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல காரமடை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரிடமிருந்து 600 லாட்டரி சீட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் 25 நபர்கள் மீது நன்னடத்தை பிணை பத்திரம் பெற்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
கோவை மாவட்ட காவல்துறையின் இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடைபெறும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை கோவை தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம்
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அந்நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ஜீவானந்தம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.