கோவையில் போலி மருத்துவர் கைது; கிளினிக்கிற்கு சீல் வைத்த சுகாதாரத் துறை
12 ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தேவராஜ் என்பவரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் 12 ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தேவராஜ் என்பவரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்த நிலையில், கிளினிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் நீலிகோணம் பாளையம் பகுதியில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது. இந்த கிளினிக்கில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு அந்த கிளினிக்கு சென்றனர். ஜோதி கிளினிக் என்ற பெயரில் தேவராஜ் என்பவர் அங்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இணை இயக்குனரின் ஓட்டுநரை நோயாளி போல் தேவராஜிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். தேவராஜ் அவருக்கு பல்ஸ், டெம்பரேச்சர் போன்றவை பார்த்து ஊசி போட இருந்த நிலையில், இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அவரை பிடித்தனர். பின்னர் அவரது ஆவணங்களை சரி பார்த்த போது, அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் மருந்து கடையில் முதலில் வேலை பார்த்து வந்ததும், பின்னர் அந்த அனுபவத்தை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்து இருப்பதும் தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீலிகோணம் பாளையம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அந்த கிளினிக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பயன்படுத்தப்பட்ட மருத்துவ குப்பிகள் மற்றும் மருந்து வகைகளை அதிகாரிகள் கைபற்றினர். இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதன் பேரில் வந்த காவல் துறையினரிடம் போலி மருத்துவர் தேவராஜை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலி மருத்துவர் தேவராஜை கைது செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போலி மருத்துவர் தேவராஜ் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். போலி மருத்துவர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, மருத்துவர் எனக்கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் சில இடங்களில் மருத்துவ படிப்பு படிக்காமல், போலியாக மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர்கள் மீது சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.