டிடிஎப் வாசன் போல பைக் ஸ்டண்ட்; விபத்துக்குள்ளான கோவை இளைஞர் லைசென்ஸ் ரத்து
தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் அருகே பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது, முரளி கிருஷ்ணன் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானார். இதில் அவரது இடது கால் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். 27 வயதான இவர் ஒரு பைக் ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். பைக் ஸ்டண்ட் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்து, அந்த வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். மேலும் முரளி கிருஷ்ணன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பாதுகாப்பற்ற முறையில் பைக் ஸ்டண்டுகளை செய்துள்ளார். இவர் தனது பைக் ஸ்டண்ட் தொடர்பான 1106 வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 76 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் அருகே பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது, முரளி கிருஷ்ணன் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானார். இதில் அவரது இடது கால் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முரளி கிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துள்ளாகி இருப்பதையும் முரளி கிருஷ்ணன் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்து முரளி கிருஷ்ணன் விபத்துக்குள்ளானது குறித்து கோவை மாநகர காவல் துறையினர் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து விபத்து நடந்த இடம் புறநகரில் இருப்பதால், மாவட்ட காவல் துறை வரம்புக்கு உட்பட்டது என்றாலும், மாநகர காவல் துறையினர் அவரது இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்கில் பைக் ஸ்டண்ட் முயற்சிகளை கண்டு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட சேலம் - கொச்சின் புறவழிச்சாலையில் பலமுறை ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமத்தை இரத்து செய்ய காவல் துறையினர் போக்குவரத்துத் துறையினருக்கு பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் முரளி கிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்து விபத்துள்ளான யூடியூபர் டிடிஎப் வாசன் என்கிற வைகுந்தவாசன் (23) கைது செய்யப்பட்டு, அவரது ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் வீடியோக்களை பதிவிடும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் மட்டும் இதுபோன்ற பைக் ஸ்டண்ட் செய்து, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 5 பேரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அதில் பைக் ஸ்டண்ட் செய்து விபத்துள்ளான முரளி கிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு பேரையும் இதுபோல பைக் ஸ்டண்ட் செய்து வீடியோக்களை வெளியிடக்கூடாது என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.