Pollachi: தொடர் மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி, வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
![Pollachi: தொடர் மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை Coimbatore news Tourists banned due to flooding in Kaviaruvi due to rain in pollachi - TNN Pollachi: தொடர் மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/effedd13a39eb5a4d4c037a46ed7e5011704806642595188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை காரணமாக கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. காந்திபுரம், பூமாா்க்கெட், ஆா்.எஸ்.புரம், வடவள்ளி, ராமநாதபுரம், அவிநாசி சாலை, சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் ஆழியார் அணை அருகே கவியருவி அமைந்துள்ளது. பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் அமைந்துள்ளது கவியருவிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Also read : கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி காட்டு யானைக்கு உதவிய வனத்துறை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)