மாட்டிறைச்சி சாப்பிடுவாயா என மாணவியை இழிவுபடுத்திய விவகாரம்; ஆசிரியர் பணியிடமாற்றம்
மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைத்து விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்திரவிட்டார்.
கோவை துடியலூர் அசோகபுரம் பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இவர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து ஆசிரியர் அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வகுப்பு ஆசிரியர் அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதை தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியர் அபிநயா குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் அபிநயா மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகவும், அப்போது 'உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ என்ற கேள்விக்கு, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு "மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி" என்று ஆசிரியர் அபிநயா சொன்னதாகவும், அதற்கு மாணவி எனது பெற்றோரை பற்றியும் தொழிலை பற்றியும் ஏன் பேசுகிறீர்கள் என்று பதிலுக்கு பேசியதற்கு, ஆத்திரம் நடந்த ஆசிரியை அபிநயா மாணவியை கண்ணத்தில் அடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிடம் முறையிட்ட பொழுது அவரும் மிரட்டுகின்றீர்களா என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று சக மாணவிகள் மத்தியில் வைத்து கேட்டும், சூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக இருப்பதாகவும் கூறி மாணவி நேற்று கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாகவும், காவல் துறையினர் விசாரித்து உரிய அறிவுரை வழங்கியதுடன், பள்ளிக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் மீண்டும் திரும்பவும் மாணவியை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதால் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாணவி அளித்த முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளியில் நேற்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர் அபிநயா, பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவியர் ஆகியோரிடம் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். 7 ம் வகுப்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்திய அவர், அவர்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக் கொண்டார். பிற்பகலுக்குப் பின்னர் ஏழாம் வகுப்பு மாணவி மற்றும் அவரது பெற்றோர்கள் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தனது விசாரணை அறிக்கையினை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் வழங்கினார். இதனிடையே மாணவியின் தரப்பில் ஆட்சியரை சந்தித்து இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, இந்த விவகாரம் குறித்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைத்து விசாரணை நடத்திட உத்திரவிட்டார். இந்த விசாரணையானது விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளியில் சர்ச்சைக்கு காரணமாக பயிற்சி ஆசிரியர் அபிநயாவை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தும் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.