பொள்ளாச்சியில் லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதும், அது இலஞ்சமாக பெற்ற பணம் என்பதும் தெரியவந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடு நடைபெறுவதாக கோவை மாவட்ட ஊழல் தடுப்புலஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், கடந்த 8ஆம் தேதியன்று லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் லதா, ஷீலா தலைமையிலான அதிகாரிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை நீண்ட நேரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக வளாகத்துக்குள் கடை நடத்தி வருபவர்கள் அலுவலகத்திற்குள் அடிக்கடி சென்று வருவதை கவனித்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், திடீரென அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மேலும் அலுவலகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக வளாகத்திற்குள் வாடகைக்கு கடை நடத்தி வரும் தனியார் கடைகளான ஜெராக்ஸ், ஸ்டுடியோ மற்றும் டீக்கடை நடத்தி வருபவர்களை பிடித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதும், அது இலஞ்சமாக பெற்ற பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளரும் செல்வி மற்றும் இடைதரகர் இளங்கோவன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இலஞ்ச புகாரில் சிக்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.