கோவை: சாலை தரமில்லை.... புகார் கூறியவர்களை தாக்கிய திமுக கவுன்சிலர்; பாஜக திட்டமிட்டு பிரச்னை செய்ததாக கவுன்சிலர் விளக்கம்
கோவை அருகே தரமற்ற சாலை போடப்பட்டதாக முறையிட்டவர்களை திமுக கவுன்சிலர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையம் என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி கார்டன் என்ற பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வியெழுப்பி உள்ளனர். தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், கவுன்சிலர் மோகனுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் மோகன் கேள்வி கேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதில் கவுன்சிலர் மோகன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஒருவரை செருப்பால் அடித்ததாகவும், கவுன்சிலரின் தரப்பினர் கார் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். திமுக கவுன்சிலர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள திமுக கவுன்சிலர் மோகன், “நடந்தது என்ன எனத் தெரியாமல் எனக்கு எதிராக பாஜகவினர் வீடியோவை பரப்பியுள்ளனர். நேற்று மக்களை கூட்டி ஆலோசணை கூட்டம் நடத்தினோம். அப்போது பாஜகவை சேர்ந்த ஜெயலட்சுமி பெண் ஒருவர் சாலை தரமில்லை என புகாரளித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கும், இப்பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பெண் பாஜகவினரை போனில் அப்பகுதிக்கு வரவழைத்தார். இதையடுத்து வந்த பாஜகவினர் எங்களை தகாத வார்த்தைகளால் பேசினர். முத்து என்பவரை அடித்து உடைத்தனர். பெண்கள் சுடிதாரை பிடித்து இழுத்தனர். பாஜகவினர் பிரச்சனை செய்ததை தட்டி கேட்க சென்ற போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதற்கு முன்பு இரண்டு மணி நேரம் நடந்த பிரச்சனை வீடியோவை வெளியிடவில்லை. இக்கூட்டத்திற்கு பிரச்சனை செய்ய வேண்டுமென பாஜகவை சேர்ந்த வெளியூர் ஆட்கள் வந்தனர். உள்ளூரில் எனது பெயரை கெடுக்க வேண்டும் என திட்டமிட்டு செய்துள்ளனர். சுயமரியாதையை தொடும் போது, அதற்கு உண்டான விளைவுகளை செய்து தான் தீருவார்கள். வீடியோ பரவுவதால் ஒன்றும் பிரச்சனையில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்