காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 1.90 கோடி ஹவாலா பணத்தை கேரள காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.1.90 கோடி ஹாவாலா பணத்தை கேரள காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி குருடிக்காடு என்ற இடத்தில் கேரள காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த இன்னோவா காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்லவே, அந்த காரை ஜீப்பில் விரட்டி சென்று காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். காரில் இருவர் இருந்த நிலையில், வாகனத்தை காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது காரில் இருக்கைக்கு கீழே ரகசிய அறை அமைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த அறையை திறந்து காவல் துறையினர் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமது குட்டி மற்றும் புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது. கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தை பெறுபவர்கள் குறித்து பாலக்காடு மாவட்டம் கஸபா காவல் நிலைய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக அடிக்கடி ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவதும், காவல் துறையினர் சோதனைகளில் பணம் பிடிபடுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.