Kovai Kutralam Falls: கோவை குற்றாலம் ஒரு மாதத்திற்கு பிறகு நாளை திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒரு மாத காலத்திற்கு பிறகு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவது, சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதனிடையே தென் மேற்கு பருவ மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மிதமான மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் கோவை குற்றாலத்தில் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் நலன் கருதி, கடந்த 5 ம் தேதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் 12 நாட்களுக்குப் பிறகு கடந்த 18 ம் தேதியன்று கோவை குற்றாலம் இன்று திறக்கப்பட இருந்த நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.. இந்நிலையில் கோவை குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ உகந்த சூழல் நிலவுவதால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாத காலத்திற்கு பிறகு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவது, சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

