TN Budget 2022: 'புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை வரவேற்கிறோம்’ - கோவை தொழில் துறையினர் கருத்து
தமிழ்நாடு அரசின் 2022-2023 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கு கோவை தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் 2022-2023 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கைக்கு கோவை தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்மா எனப்படும் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறுகையில், “ஐடிஐ எனப்படும் தொழில் பயிற்சி நிலையங்கள் மேம்பாட்டிற்கு 2517 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டு மானியத்திற்கு 300 கோடி ரூபாயும், சிறு, குறுத்தொழில் மேம்பாட்டிற்கு 911 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை வரவேற்கிறோம். தனியார் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசு சார்பில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கிறோம். கோவையில் கைத்தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் ஆகியவை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும். புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டாக இருப்பது வரவேற்கத்தக்கது” என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறு, குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் கூறுகையில், ”1.300 கோடி ரூபாய் முதலீட்டு மானியம். 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி. தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அந்நிறுவனங்களின் பொருள்களை 50 லட்சம் ரூபாய் அளவில் தமிழக அரசு துறைகல் கொள்முதல் செய்ய அறிவுறுத்த திட்டம். TIIC மூலம் சிறு குறு தொழில்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் திட்டம். இதற்கு தமிழக அரசு 100 கோடி ரூபாய் உத்தரவாதம் அளித்தது ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
குறுந்தொழில் பேட்டை அமைப்பது குறித்து அறிவிப்பு ஏதுமில்லாதது, குறுந்தொழில்களுக்கு தனிக் கடன் திட்டம் ஏதுமில்லாதது, குறுந்தொழில்களுக்கு மின் கட்டண சலுகை ஏதும் அறிவிக்காதது ஆகியவை ஏமாற்றம் அளிக்கிறது. வரும் காலங்களில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போன்று தொழில் துறைக்கும் தனி பட்ஜெட் வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்