கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!
வெறுமையும், தனிமையும் நிரம்பிய சிறைச்சுவர்களுக்கு 5 கைதிகள், வண்ணம் பூசி கதை சொல்லும் ஓவியங்களாக மாற்றி புதுப்பரிமாணத்தை அளித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.
சிறைச் சாலைகள் வெறும் தண்டனை கூடங்கள் என நினைக்காமல் நன்னடத்தையை வெளிக்காட்டும் வாய்ப்பாக பயன்படுத்தி, பலர் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் சிறைச்சாலைகளில் இருந்து பல தலைவர்களும், பட்டதாரிகளும், எழுத்தாளர்களும் உருவாகியுள்ளனர். அதேபோல சிறைவாசிகளின் மறுவாழ்விற்காக கைவினை தொழில்களும் சிறை நிர்வாகத்தினால் கற்றுத் தரப்படுவது வழக்கம். அப்படி கோவை மத்திய சிறை அதிகாரிகள் அளித்த திறன் மேம்பாட்டு பயிற்சியினால், சிறைச் சுவர்களை வண்ண ஓவியங்களால் 5 கைதிகள் நிரப்பி கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.
சிறைச்சாலைகள் என்றால் வெறுமையும், தனிமையும், சித்ரவதைகளும்தான் நமது நினைவுக்கு வரும். அதற்கு மாறாக கோவை மத்திய சிறை சுவர்கள் அந்த 5 கைதிகளின் கைவண்ணத்தில் அழகான வண்ண ஓவியங்களாக ஜொலிக்கிறது. சிறைச்சாலை சுவர்கள் ஆயிரக்கணக்கான கதைகளைக் கொண்டது. பல துக்கங்களையும், தன்னிடத்தில் பதுக்கி வைத்துள்ளது. அவற்றுக்கெல்லாம் ஆறுதலாகவும், அதற்கு வண்ணம் பூசி கதை சொல்லும் ஓவியங்களாகவும் மாற்றி புதுப்பரிமாணத்தை அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பிர்லா (31), சேலம் கொண்டலாம்பட்டி ஜெகதீசன் (34), சேலம் திப்பம்பட்டி செல்வம் (28), நாமக்கல் குப்புச்சிப்பாளையம் ராஜ்குமார் (34), ஈரோடு நூருல்லா (23) ஆகிய 5 சிறைக் கைதிகள், 2019-ம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சுவர்களில் ஓவியங்களை வரையத் தொடங்கினர்.
சிறை அதிகாரிகள் நடத்திய திறன் மேம்பாட்டு வகுப்புகளின் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அவர்களின் ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றை பார்த்த சிறை அதிகாரிகள் உள் சுவர்களில் ஓவியங்களை வரைய அனுமதி அளித்தனர்.
சிறைச்சுவர்களில் இயற்கை மற்றும் தேசபக்தி ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரம் மற்றும் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் போன்ற ஆளுமைகளின் உருவப்படங்களை தங்களது கைவண்ணத்தில் ஓவியமாக சுவர்களில் வரைந்துள்ளனர். எழில்மிகு இயற்கை காட்சிகள், தண்ணீரில் பிரதிபலிக்கும் மர நிழல், கிதார் போல வரையப்பட்ட கட்டிடம், சிறைக்குச் சென்று பட்டதாரியாகத் திரும்பும் இளைஞர், யானையின் உடலுக்குள் மறைந்திருக்கும் விலங்குகள், மரங்களையே அதன் கொம்பாகக் கொண்ட மான் என கற்பனைத் திறனைக் காட்சிகளாக படைத்துள்ளனர். சட்டத்திலிருந்து வெளிவருவது போலான 3 டி புலி ஓவியம் வரைந்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், “இயற்கைக் காட்சிகள் நிறைந்த எழில்மிகு தோற்றத்துடன் வெள்ளைச் சுவர்கள் அற்புதமான சுவரோவியங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களால் சுவர்களின் அழகு பன்மடங்கு பெருகி உள்ளது. வெற்றுச் சுவர்களைப் பார்ப்பது ஒருவித சலிப்பை உருவாக்கி இருந்தது. இதை இவர்களின் ஓவியம் மாற்றி உள்ளது. நேர்மறையான சூழலை உருவாக்கி உள்ளது. இவர்களின் இத்தகைய முயற்சி நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதற்கான நல்ல முயற்சியாகும். இது போன்ற செயல்கள் பிற கைதிகளுக்கு நல்போதனை தரும். அவர்கள் தங்களது தண்டனைக் காலம் கழிந்து நன்னடத்தையை பின்பற்றி வாழ வழிவகுக்கும் என்று நம்பலாம்” என அவர்கள் தெரிவித்தனர்.
கைதிகளின் கைவண்ணத்தில் வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் கோவை மத்திய சிறைச்சுவர்கள்! - புகைப்பட ஆல்பம்