கோவை அருகே விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - 2 பேர் கைது
அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைத்தால் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் இத்தாலியன் ஃபர்னிச்சர் என்ற நிறுவனத்தின் 80 அடி உயரம் கொண்ட விளம்பர பலகை வைக்கும் பணிகள் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விளம்பர பலகைகள் பொருத்தும் பணிகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதில் பலத்த காற்று காரணமாக விளம்பர பலகை பொருத்த அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த குமார், குணசேகரன், செந்தில் முருகன் ஆகிய 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அருண்குமார், சேது ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விளம்பர பலகை வைக்க அனுமதியின்றி சேலத்தை சேர்ந்த பாலாஜி என்ற ஒப்பந்ததாரர் மற்றும் பழனிசாமி என்ற துணை ஒப்பந்ததாரர் விளம்பர பலகை பொருத்தும் பணிகளை எடுத்து செய்து வந்ததும், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தும் தெரியவந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரர் பாலாஜி, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி, நிலத்தின் உரிமையாளர் ராமசாமி உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பழனிசாமி, அருண் என்ற மேலாளர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அறிக்கையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகளை ஒரு மாதத்தில் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து அகற்ற தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைத்தால் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்