(Source: ECI/ABP News/ABP Majha)
'இனமானம், தன்மானம் இல்லாத கூட்டம் தான் திமுக ஆட்சியை விமர்சிக்கிறது’ - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
”சொந்தக் கட்சியின் அதிகார போட்டியையும், தங்களது கையாளகதானத்தையும் மறைக்க திமுகவை விமர்சனம் செய்கின்றனர். திமுகவை விமர்சனம் செய்யும் தகுதி, யோக்கியதை கிஞ்சிற்றும் கிடையாது”
கோவை ஈச்சனாரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு இதுவரை ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த மாவட்டம் மற்றும் மாவட்ட மக்கள் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம் இது. இந்த விழாவை அரசு விழா என சொல்வதை விட, கோவை மாநாடு என சொல்லும் வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசு மீது கோவை மாவட்ட மக்கள் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதைக்கும் சாட்சியாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்களின் முக மலர்ச்சியின் மூலம் அறிந்து கொள்கிறேன். தனக்கென இலக்கு வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வென்று காட்டி வருகிறார்.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் கோவை. பெருந்தொழில்கள் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஏராளமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் கோவை முக்கிய பங்காற்றி வருகிறது. நூற்பாலை, விசைத்தறி, மோட்டர் பம்புசெட், வெட் கிரைண்டர், உதிரிபாகங்கள் தயாரிப்பு, நகை தயாரிப்பு, தென்னைநார் சார்ந்த தொழில்கள் என தொழில் வளம் கொண்ட மாவட்டமாக கோவை விளங்குகிறது.
589 கோடி மதிப்பீட்டில் ஒரு இலட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளேன். திமுக அரசு என்ன செய்தது எனக் கேட்பவர்களுக்கு, இது தான் சாதனை.
அனைத்துத் துறை சார்பில் 682 கோடி ரூபாய் மதிப்பிலான 748 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 271 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன். 662 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். சிலருக்கு உதவி செய்து கணக்கு காட்டும் அரசு திமுக அரசு அல்ல. கணக்கிடாத முடியாத பணிகளை செய்து காட்டுவது தான் திமுக அரசு.
இன்று 3 புதிய முன்னெடுப்புகள் துவங்க உள்ளோம். 161 கோடி ரூபாய் கல்விக் கடன் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 60 கல்லூரி மற்றும் 200 அரசுப் பள்ளிகளில் நான் முதல்வன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மாற்றுத்திறனாளி, திருநங்கை, கைம்பெண் தனியார் துறை வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டப் பணிகளுக்கு 1810 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை வளர்ச்சிக்காக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியம், முதல்வரின் முகவரி திட்டம் மூலம் நலத்திட்ட உதவிகள், மக்களைத் தேடி மருத்துவம், வரும்முன் காப்போம் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, புதிய மின் இணைப்புகள், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்ட திட்டங்களால் இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர்.
கோவை தொழில் துறையினர் கோரிக்கை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் பழுதடைந்த சாலைகள் மேம்படுத்த 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையை இடம்மாற்றி செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. எனது கோரிக்கையை ஏற்று கேரள முதலமைச்சர் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் தேவையை நிறைவேற்ற தண்ணீர் திறந்துவிட்டார். கோவையில் மெட்ரோ இரயில் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஒராண்டு காலத்தில் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சமூக நீதி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. டெல்லி சென்ற போது தமிழ்நாடு வளர்ச்சி அங்கிருக்கும் தலைவர்கள் உயர்ந்த கருத்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். இது ஒரு நாளில் பெற்றது அல்ல. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் செல்வதால் பெற்றது. திமுக கடினமான பாதை கடந்து வந்திருந்தாலும், மக்கள் இன்புறுற்று இருக்க பாடுபடுகிறது. அதில் எந்த நாளும் மாறுபாடு இருக்காது.
தமிழ்நாட்டின் முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதனை சிலரால் தங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை எனச் சொல்லி வருகின்றனர். மக்களோடு மக்களாக வந்து கேட்டுப் பார்த்தால் தான் தெரியும். பேட்டி கொடுக்க மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களால், புரிந்து கொள்ள முடியாது.
திட்டங்களால் பயனடைந்த மக்கள் திமுக ஆட்சியை நன்றி மறவாத தன்மையோடு வாழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அதனை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பிக் கொண்டு, அளித்து வரும் பேட்டிக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. இனமானம், தன்மானம் இல்லாத கூட்டம் தான் திமுக ஆட்சியை விமர்சிக்கிறது. திமுக அரசு ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் அரசு. அடக்கப்பட்டவர்களுக்கு அரவணைப்பு தரும் அரசு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கான அரசு. சிறுபான்மை, பெரும்பான்மை மக்களின் ஒற்றுமை சிதைந்து விடக்கூடாது என நினைக்கும் ஒற்றுமை அரசு. தாயைப் போல அனைவருக்குமான அரசாக திமுக அரசு உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 அவசியமான திட்டங்களின் கோரிக்கைகள் பட்டியலை, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம். மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். இது எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டம். இத்திட்டத்தினால் அதிமுக, பாஜகவினரும் தான் பயனடைய இருக்கின்றனர். அவர்கள் பாராட்டு, நன்றி தெரிவிக்காததை பற்றி கவலைப்படமாட்டேன். அதை எதிர்பார்த்து கடமையாற்றுபவன் நான் அல்ல.
மக்களுக்காக கடமையாற்றுபவன். போற்றுபார் போற்றாட்டும், தூற்றுவார் தூற்றட்டும். மக்களின் பாராட்டு எனக்கு போதும். உங்களது முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சி என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என அண்ணா சொன்னார். உங்கள் சிரிப்பில் இறைவனை, அண்ணாவை, கலைஞரை காண்கிறேன்.இந்த கோட்பாடு, சிந்தனை நிறைவேறக்கூடாது என சிலர் என்னை விமர்சனம் செய்கின்றனர்.
விமர்சனத்தில், விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். எதிர்ப்பை அடக்குமுறையை மீறி வளர்ந்தவன். என்னை எதிர்த்தால் தான் உற்சாகமாக செயல்படுவேன். ஆனால் மக்களுக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்தக் கட்சியின் அதிகார போட்டியையும், தங்களது கையாளகதானத்தையும் மறைக்க திமுகவை விமர்சனம் செய்கின்றனர். திமுகவை விமர்சனம் செய்யும் தகுதி, யோக்கியதை கிஞ்சிற்றும் கிடையாது” என அவர் தெரிவித்தார்.