(Source: ECI/ABP News/ABP Majha)
நடிகர் விஜய் குறித்த கேள்வி... அண்ணாமலையின் அதிரடி பதில் - 2026இல் யார் ஆட்சி? - முழு பேச்சு
திமுக தொண்டனுக்கு கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்டி ரத்தம் வெளியில் வருவதை படமாக எடுத்து சமூக வலைதளங்களில் போடாதீர்கள், இது தேவையில்லாத வேலை.
“எங்களுடைய செயல்பாடு தான் தமிழகத்தில் அதிமுக நிராகரிக்கப்பட்டிருக்கிறது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. அப்பொழுது 303 இடங்கள் மோடி பெற்றிருந்தார். அதிமுக ஆளுங்கட்சியாக அப்போது இருந்தபோது பாஜக கூட்டணியில் வரலாறு காணாத தோல்வியை அடைந்தோம். 2024 தேர்தலில் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி வருகின்றார். இருவரும் ஒன்றாக இருந்தால் 35 வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி கூறுகிறார். தனியாக இருந்த போது ஒரு சீட்டு கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் மூன்று அணியை பார்த்துவிட்டு வாக்களித்து இருக்கின்றனர். அதிமுக தலைவர்கள், இவ்வளவு நாட்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுத்தோம் என்று சொன்னார்கள். இப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பேட்டியை பார்க்கும் பொழுது, அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது என தெரிவித்தார்.
இந்த கூட்டணி பிரிந்த பின்பு நிர்ப்பந்திக்கப்பட்டு சில சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததாக சொன்னவர்கள், இன்று பிஜேபி உடன் இருந்தால் சீட் கிடைத்து இருக்கும் என சொல்வது எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் பிரச்சனையை ஆரம்பித்திருப்பதாக பார்க்கிறேன் என தெரிவித்தார்.
2019-ல் ஆளுங்கட்சியாக இருந்த பொழுது ஒரு சீட் கூட வாங்க முடியவில்லை. எந்த அர்த்தத்தில் அதிமுக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தான் இந்த தேர்தல் சொல்லும் செய்தி. எஸ்டிபிஐ போன்ற அடிப்படை வாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டால் என்ன ஆகும் என்பதை அதிமுக தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கின்றனர்.
எல்லா தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏ இருக்கும் இந்த மாவட்டத்தில், மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கின்றனர். கோவையில் இதற்கு முன்பு இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா ? கோவை மக்கள் அதிமுகவை நிராகரிக்க வருகின்றனர். அந்த விரக்தியின் உச்சத்தில் எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
என்னுடைய தொண்டர் மொட்டை அடித்து ஊர்வலமாக சென்றது வருத்தமாக இருந்தது. ஒரு தொண்டர் விரலை வெட்டிக் கொண்டார். அவர்களுக்கு நாம் சொல்வது நம்முடைய காலம் வரும். நமது கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது எனவும், கடுமையாக பணி செய்ய வேண்டும் தொண்டர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். ஆட்டை கொண்டு வந்து நடுவழியில் வெட்டுவது அதை கொடூரமாக படமெடுத்து சமூக வலைதளங்களில் போடுவது தவறு. ஆட்டை வெட்டும் திமுக காரர்களுக்கு கோவம் இருந்தால், ஆட்டை விட்டுவிட்டு என்னை வெட்டுங்கள். இதுதான் எனது ஊர். திமுக தொண்டனுக்கு கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்டி ரத்தம் வெளியில் வருவதை படமாக எடுத்து சமூக வலைதளங்களில் போடாதீர்கள், இது தேவையில்லாத வேலை என தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அண்ணாமலை வராமல் இருப்பது குறித்த கேள்விக்கு , சமூக வலைத்தளங்களில் இது குறித்து யார் பேசுகின்றனர்? வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேட்பாளராக செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். தேசிய கட்சியின் மாநில தலைவர் எல்லா இடத்திலும் பார்க்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொதுமக்கள் இல்லை என தெரிவித்த அவர், கட்சி முகவர்களும், மீடியாவும் மட்டுமே இருக்கும் இடத்தில் வேட்பாளருக்கு என்ன வேலை ? வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வராமல் வேறு வேலை பார்க்கக் கூடாதா ? வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர் கண்டிப்பாக வர வேண்டுமா ? அங்கேயே உட்கார வேண்டும் என விதிகள் ஏதாவது இருக்கிறதா ? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கோவையில் அதிமுக ஊழலை மக்கள் பார்த்தார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றது. அதை தனிப்பட்ட முறையில் கையில் எடுத்து செய்து மக்களிடம் கட்டுவது என்னுடைய சங்கல்பம். படிப்படியாக அனைத்தையும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்த அவர், பா.ஜ.க வளர்ந்து வரும் கட்சி, ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகதான் வளர முடியும் என தெரிவித்தார்.
அண்ணாமலையை விட ஏற்கனவே கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகள் வாங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் ஞானத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறான தகவலை அதிமுக உடைய மூத்த தலைவர் ஊடகங்களிடம் சொல்லக்கூடாது, பத்திரிகையாளர்களும் அவர் சொல்வதை அப்படியே கேட்கக் கூடாது என தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளிக்க மறுத்தார்.
கோவை மாதிரி அதிமுக கோட்டை என்ற இடத்தில் அதிமுக டெபாசிட்டை மிக நெருக்கமாகதான் வாங்கியிருக்கிறார்கள் எனவும், மூன்று சட்டமன்றத் தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள் எனவும், இது மக்களோடு மக்களாக பாஜக பணி செய்வதால் வந்திருக்கிறது எனவும் தெரிவித்தார். மூன்று முறை போட்டி, இரண்டு முனை போட்டியாக மாறி போட்டியிடும் நிலை வரும் எனவும், கோவையில் வாக்களித்த மக்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம், ஆளும் கட்சியின் அனைத்து இடர்பாடுகளுக்கு இடையில் வாக்களித்து இருப்பது பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கை இதை காட்டுகின்றது எனவும், இந்த வாக்கு எங்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி இருக்கிறது என தெரிவித்தார்.
எஸ்.வி.சேகர் யார் என்பது தெரியாது, என்னுடைய செயல்பாடு பாஜகவை இரட்டை இலக்கத்திற்கு நகர்த்தி இருக்கிறது. 12 இடங்களில் இரண்டாவது இடத்திற்கு நகர்த்தி இருக்கிறது. அதிமுகவின் கோட்டையில் அவர்களை டெபாசிட்டை ஜஸ்ட் என வாங்க வைத்திருக்கிறது. எங்களுடைய செயல்பாடு தான் தமிழகத்தில் அதிமுக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் செயல்பாடு தான் பாஜக வேகமாக வளருகின்ற கட்சி என்பதை காட்டி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, யார் அரசியலுக்கு வந்தாலும் புதியவர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். 2026யை பொறுத்தவரையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். 2026ல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது என்னுடைய பேச்சை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அதற்கு இன்னொரு தலைவரை கொண்டு வந்துதான் நடத்த வேண்டும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.