’நானும் திராவிடன்தான்; திராவிடர்கள் தான் தமிழகத்தை ஆள முடியும்’ - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
”தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது”
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் பேசுபொருளாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று கண்ணாட்டுவிளையில் மாணவி கொடுத்துள்ள புகார் மற்றொரு சான்று. மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கின்றார். கண்ணாட்டுவிளை விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை எதற்கு பள்ளி அறைக்கு கொண்டு வருகின்றார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டும். கட்டாய மதமாற்றம் செய்யக்கூடாது. காது கேளாத அரசுக்கு இது எப்படி கேட்கும்? கன்னியாகுமரி விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதில் பா.ஜ.க தலையிடும்.
20 ஆண்டு காலம் இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்துவிடலாம். ஏ.ஆர்.ரகுமான் ஆசைதான் எங்களின் ஆசையும். இங்கு தமிழை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். 50 ஆயிரம் பேர் தமிழில் எழுதுபவர்கள் குறைந்த இருக்கின்றனர். அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி, தமிழை பயிற்று மொழியாக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய முன் வந்தால் பா.ஜ.க உடன் இருக்கும். தமிழ் மெல்ல செத்து கொண்டு இருக்கின்றது. 5 முறை திமுக ஆட்சியில் என்ன செய்து இருக்கின்றது? சர்வதேச அளவில் தமிழை வளர்க்க கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும்.
இந்தி விவகாரம் தொடர்பாக அமத்ஷா உள்துறை அமைச்சராக பேசி இருக்கின்றார். தமிழை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் எங்கள் கருத்தை சொல்லுவோம். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழி தான் நம்பர்ஓன். குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருக்கின்றது. சட்டமன்றத்தில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.கவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி இருக்கின்றது? தேவையில்லாத வேலையை செய்வது தமிழக முதல்வர் தான். வரலாறு எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் பேசுகின்றார். 10 மாதமாக கேலி செய்யும் அளவிற்கு தமிழக ஆட்சி இருந்து வருகின்றது. பா.ஜ.கவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.
நீட் விவகாரத்திற்கு பல மாநிலங்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த மாநிலம் பதில் அளித்தது? மத்தியில் 450 சீட்டுகளை பிடித்து பா.ஜ.க மீண்டும் இந்தியாவில் ஆட்சி அமைக்கும். நடிகர் விஜய் பேசியது தான் பிரபலமாகின்றது. இந்தி தேவை என்றால் கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றோம். பீஸ்ட் ரெவியூ பார்த்தேன். நல்லா இருப்பதாக சொல்கின்றனர். இந்தி பிரச்சார சபையில் பிராத்மிக் தேர்வில் தமிழக மாணவர்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றனர். சினிமாவில் விஜய் நடிகராக பேசுகின்றார்.
ஏ.ஆர்.ரகுமான் அவருடைய படமாக தமிழன்னை படத்தை வெளியிட்டு இருக்கின்றார். கருத்து சுதந்திரம் அடிப்படையில் அவர் பதிவிட்டு இருக்கின்றார். எங்கள் எதிரி திமுக மட்டும் தான். ஏப்ரல் 14 யை சமத்துவ நாளாக 5 முறை ஆட்சிக்கு வந்த பின் இப்போது தான் திமுக சொல்லி இருக்கின்றது. ஆனால் பா.ஜ.க சமத்துவநாளாக அம்பேத்கர் பிறந்தநாளை நீண்ட நாட்களாக அனுசரித்து வருகின்றது.பா.ஜ.கவின் அனைத்து பூத்களிலும் அம்பேத்கர் படத்திற்கு நாளை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருக்கின்றோம்.
சமூக நீதியாக ஊறிய கட்சி பா.ஜ.க. திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன் தான். திராவிடர்கள் தான் தமிழகத்தை ஆள முடியும். திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள் தான். நான் திராவிடன். தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது. பா.ஜ.க கொள்கை அடிப்படையில் தான் வேறு. வரும் 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.