தாயை பிரிந்த குட்டி யானை; மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறை தீவிர முயற்சி
தாய் யானையுடன் குட்டி யானை இரவு வரை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்க திட்டமிட்டனர்.
![தாயை பிரிந்த குட்டி யானை; மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறை தீவிர முயற்சி Baby elephant that was separated from its mother forest department is trying to reunite - TNN தாயை பிரிந்த குட்டி யானை; மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறை தீவிர முயற்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/8f20f57670aa98fb72ee10be9c682abc1717664489784113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, மூன்று மாதமான குட்டி யானை உடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.
தாயை பிரிந்து சென்ற குட்டி யானை
தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மூன்று நாட்களாக அந்த யானையுடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, நேற்று காலை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.
குட்டி யானையை தாயுடன் சேர்க்க முயற்சி
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு குட்டி யானையை கொண்டு வந்தனர். பின்னர் குட்டி யானைக்கு பழங்கள் இளநீர் கொடுக்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை இரவு வரை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து வரும் யானை பாகன்கள் இன்று மாலை குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று தாய் யானையுடன் குட்டியை சேர்க்கும் முயற்சி நடைபெறும் போது மழை குறுக்கீடு, தேனீக்கள் தொந்தரவு என பல்வேறு சிக்கல்கள் இருந்த போதிலும் குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் யானை பாகன்கள் உதவியுடன் அதனை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)