சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
Karthigai Deepam 2025: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு வேண்டிக்கொணடு அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? என்பதை கீழே காணலாம்.

கார்த்திகை மாதம் என்றாலே ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத மாதம் ஆகும். கார்த்திகை மாதம் சிவபெருமான், முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம். இதே மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை தீபமும் வருவது வழக்கம்.
திருவண்ணாமலைக்கு மாலை:

கார்த்திகை தீபம் என்றாலோ சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, கார்த்திகை தீபம் திருநாளில் சிவபெருமானை தரிசிக்க திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பரணி தீபம் மற்றும் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிவது போல சிவபெருமானுக்கும் இதே மாதத்தில் மாலை அணியும் வழக்கம் உண்டு.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு வேண்டிக்கொண்டு இந்த மாலையை பக்தர்கள் அணிகின்றனர். இது கடந்த பல வருடங்களாகவே பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்படி?
1. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு விரதம் இருந்து பக்தர்கள் மாலை அணிகின்றனர்.
2. இந்த மாலையை 10 நாட்கள் அணிந்து விரதம் இருக்க வேண்டும்.
3. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றப்படுகிறது.
4. கொடியேற்றம் முடிந்த உடன் கொடி மரத்தின் அருகில் உள்ள சம்பந்த விநாயகர் கோயில் சன்னதி முன்பு பக்தர்கள் மாலை அணிந்து கொள்வார்கள்.
5. திருவண்ணாமலைக்கு நேரில் வந்து மாலை அணிந்து கொள்ள முடியாத பக்தர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று மாலை அணிந்து கொள்ளலாம்.
6. மாலை அணிந்த பிறகு 10 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். தினசரி ஒரு வேளையாவது விரதம் இருந்து பின்னர் அந்த நாளில் அண்ணாமலையாரை மனதார வணங்கி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
7. திருவண்ணாமலையில் வசிப்பவர்கள் மாலை அணிந்த பிறகு இந்த 10 நாட்களும் மாட வீதியில் நமசிவாய நாமத்தை கூறிக்கொண்டு சுற்றி வர வேண்டும்.
8. அண்ணாமலையாருக்கு உள்ளூரில் மாலை அணிந்தவர்களும், வெளியூரில் இருந்து மாலை அணிந்தவர்களும் 10வது நாள் அதாவது மகாதீபம் நாளில் திருவண்ணாமலைக்கு வர வேண்டும்.
9. அவ்வாறு 10வது நாள் திருவண்ணாமலைக்கு வரும் மாலை அணிந்த பக்தர்கள் 6 மணிக்கு மகாதீபத்தைப் பார்த்த பிறகே மாலையை கழட்ட வேண்டும்.
10. மாலையை கழட்டிய பிறகு உங்கள் வீட்டு பூஜையறையில் மாலையை வைக்க வேண்டும்.
11. மாலை அணிவது எந்த ஊரில் இருந்தாலும் மாலையை கழட்டுவதற்கு திருவண்ணாமலைக்கு வர வேண்டியது அவசியம் ஆகும்.
களைகட்டிய திருவண்ணாமலை:

கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை களைகட்டத் தொடங்கிவிடும். திருவண்ணாமலையில் பரணி தீபத்தையும், மகாதீபத்தையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், கிரிவல பாதையிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக போதுமான பேருந்துகளும், ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.





















