7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை - 2 1/2 மணிநேரத்தில் திருச்சியில் - கோவை வந்த ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல் துறையினர் வழிவகை செய்தனர். இதனால் அந்த ஆம்புலன்ஸ் எங்கும் நிற்காமல் வேகமாக கோவையை நோக்கி வந்தது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா நவகுடியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி துர்காதேவி. துர்கா தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 27ம் தேதி அன்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது பிறந்து 7 நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு, பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி மருத்துவ சிகிச்சை செய்ய கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நவீன இயந்திரங்கள் இருப்பதால், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ராமகிருஷ்ணா என்ர தனியார் மருத்துவமனைக்கு அக்குழந்தையை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கிரீன் காரிடர்
பின்னர் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தை ஆம்புலன்சில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் ஒரு மணி அளவில், திருச்சியில் இருந்து கிளம்பி ஆம்புலன்ஸ், காவல் துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காத வகையில் வேகமாக கோவையை நோக்கி முன்னேறியது. ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல் துறையினர் வழிவகை செய்தனர். இதனால் அந்த ஆம்புலன்ஸ் எங்கும் நிற்காமல் வேகமாக கோவையை நோக்கி வந்தது. இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருந்த குழுவினர் ஆம்புலன்சில் இருந்து உடனடியாக குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார்.
மருத்துவர்கள் பேட்டி
இதையடுத்து அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”குழந்தைக்கு எந்த விதமான பாதிப்புகள் உள்ளது? எந்த மாதிரியான சிகிச்சை கொடுக்க வேண்டும்? அறுவை சிகிச்சை செய்யக்கூடிய தேவை உள்ளதா என்ற பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கு முன்பாகவே பிறந்து ஐந்து நாட்கள் ஆன குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தை தற்போது நலமாக உள்ளது. இந்த குழந்தைக்கும் பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான அறுவை சிகிச்சைகளை செய்து நலமுடன் குழந்தை காப்பாற்றுவோம்” எனத் தெரிவித்தனர். 2:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை திருச்சி மாவட்டத்திலிருந்து கோவைக்கு இயக்கி வந்த ஓட்டுனருக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.