’கோவை எம்.பி.க்களாக இருந்தவர்கள் யார், யார்?’ செய்தது என்ன? - ஆச்சரியப்படுத்தும் பட்டியல் இதோ..!
18 வது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுவரை கோவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து பார்க்கலாம்.
1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாக போட்டியிட்டதை விட, கூட்டணி கட்சிகளுக்கே அதிக முறை ஒதுக்கீடு செய்துள்ளன. 18 வது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுவரை கோவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து பார்க்கலாம்.
போட்டியின்றி தேர்வான முதல் எம்.பி.
1952 ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார், ’கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி’ என புகழப்படும் தி.அ.ராமலிங்க செட்டியார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், போட்டியின்றி கோவையின் முதல் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவினை தொடர்ந்து 1954 ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் என்.எம். லிங்கம் என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பார்வதி கிருஷ்ணனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் என்.எம். லிங்கம் வெற்றி பெற்றார். அதேசமயம் பார்வதி கிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினராக பார்வதி கிருஷ்ணன் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
1957 ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரின் சுப்பராயனின் மகளும், தொழிற்சங்கவாதியுமான பார்வதி கிருஷ்ணன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவையின் முதல் பெண் எம்.பி.யாக நாடாளுமன்ற மக்களவைக்குள் நுழைந்தார், பார்வதி கிருஷ்ணன். பின்னர் 1974 மக்களவை இடைத்தேர்தல் மற்றும் 1977 மக்களவை தேர்தல்களிலும் பார்வதி கிருஷ்ணன் கோவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கோவையில் போட்டியிட்ட நல்லகண்ணு
1962 ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான தொழிலதிபர் பி.ஆர்.ராமகிருஷ்ணன் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1967 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.ரமணி தொழிலதிபர் நா.மகாலிங்கத்தை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பெற்றி பெற்றார். 1971 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.பாலதண்டாயுதம், 77 அயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார். 1980 தேர்தலில் திமுக வேட்பாளர் இரா.மோகன் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திமுகவின் முதல் வெற்றியை பதிவு செய்தார். 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.கே.குப்புசாமி, மூன்று முறையும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1996 தேர்தலில் திமுக வேட்பாளர் மு.ராமநாதன் 2 இலட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு சம்பத்தை தொடர்ந்து நடந்த 1998 மற்றும் 1999 தேர்தல்களில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். 1999 தேர்தலில் பாஜகவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோவையில் போட்டியிட்டார். ’அமைதியான கோவை’ என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் களமிறங்கிய அவர், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அடுத்து வந்த 2004 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 1 இலட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38 ஆயிரத்து 664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2014 ம் ஆண்டு முதல் முறையாக கோவையில் தேர்தல் களம் கண்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.பி.நாகராஜ் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதியாக 2019 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
18 வது நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவும் நிலையில், யார் வெல்ல போகிறார் என்பது கோவை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும்.