அடுத்தடுத்து 65 பேரை கடித்து குதறிய தெருநாய்: எஸ்கேப் ஆன நாயை தேடும் பணி தீவிரம்!
சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 1 மணி நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்தது. இதன் காரணமாக அன்னூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த பெண் காவலர் உள்பட 65 பேரை அடுத்தடுத்து 1 மணி நேரத்தில் கடித்து விட்டு தப்பிச் சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே பொன்மணி என்ற பெண் தலைமைக் காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தெரு நாய் பொன்மணியை கடித்து குதறியது. இதேபோல அப்பகுதியில் இருந்த மேலும் சிலரையும் கடித்து குதறியது. இதனை அடுத்து அங்கிருந்து அவினாசி சாலை வழியாக ஓடிய அந்த நாய் சாலையில் சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்தது. பின்னர் அவிநாசி சாலையில் சென்ற அந்த நாய், குன்னத்தூராம்பாளையம், ஊத்துப்பாளையம், கருவலூர் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்டோரை கடித்தது. தெரு நாய் கடித்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த நாயை பொது மக்கள் விரட்டிச் சென்ற போது, அந்த வெறி நாய் கோவை மாவட்ட எல்லையில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து அந்த நாயை பிடிக்க அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்ட நிலையில், அங்கிருந்தும் தப்பி ஓடியது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தப்பியோடிய அந்த தெரு நாயை தேடி வருகின்றனர். மேலும் சாலையில் செல்வோர் தெரு நாயை பார்த்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 1 மணி நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்தது. இதனால் ஒரே நேரத்தில் நாய் கடிக்கு உள்ளானவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்தனர்.
இதன் காரணமாக அன்னூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ளதால் அதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்