”என் சாவுக்கு… திமுக பிரமுகர் மீது பெண் பரபரப்பு புகார்” என்ன காரணம்..?
கோவை மாவட்டத்தில் திமுக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து, தற்கொலை முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர் பேரூராட்சி திமுக தலைவர் மீது பகீர் புகார்
கோவை கோட்டூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணன், இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை அவரது கட்சியான திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களே புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். உறுப்பினர்களுக்கு அரசு நிதி குறித்து முறையாக எந்த கணக்கும் காட்டவில்லை என்ற புகாரும், அவர் ஊழல் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைத்து வருகின்றனர்.
ராமகிருஷ்ணன் மீது பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு – தற்கொலை முயற்சி
இந்நிலையில், பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தன்னுடைய சொத்தை மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளருக்கு கடிதமும் எழுதியுள்ள அந்த பெண், என் சாவுக்கு என் பெரியம்மாவின் மகள் திலகவதி அவருடைய மருமகன் ராம் என்கிற ராமகிருஷ்ணந்தான் காரணம் என உணர்ச்சிப் பெருக்குடன் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும், நான் வாழவிரும்பவில்லையென்றும் இதற்கு ராம்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
காவல்துறை விசாரணை:
பெண் தற்கொலைக்கு முயன்றதும் குறித்தும் ராமகிருஷ்ணன் மீது அவர் அளித்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டுகள் பற்றியும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு திமுகவினர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















