Crime : கேரள பேருந்தில் கட்டுக்கட்டாக ரூ.15 இலட்சம்பணம் பறிமுதல் - ஹவாலா பணமா..?
முகமது அப்துல்லா என்பவரிடம் காவல் துறையினர் சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி 15 லட்ச ரூபாய் பணத்தை கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சிலிருந்து கேரளா செல்லும் பேருந்தில் முறையான ஆவணம் இன்றி கொண்டு சென்ற நபரிடம் இருந்து 15 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி காவல் துறையினர் பொள்ளாச்சியில் இருந்து குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலையில் பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பேருந்தில் இருந்த பயணிகளிடம் காவல் துறையினர் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவரிடம் காவல் துறையினர் சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி 15 லட்ச ரூபாய் பணத்தை கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து 15 இலட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், முகமது அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரனையில், புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் ஆபீஸ் உரிமையாளர் பஷீர் என்பவர் ரூபாய் 15 லட்சம் பணம் கொடுத்து, கேரள மாநிலம் திருச்சூர் பேருந்து நிலையம் சென்று பைசல் என்பவரிடம் கொடுக்க சொன்னதாகவும், அதன்படி பணத்தை கொடுக்க கொண்டு செல்வதாகவும் முகமது அப்துல்லா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் இப்பணம் ஹவாலா பணமா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முகம்மது அப்துல்லா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 15 லட்ச ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து வருமான வரித் துறை அதிகாரிகளும் பணம் கொண்டு செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்