பொங்கல் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர்கள் மரணம் !!
மது அருந்திய போது ஏற்பட்ட கடுமையான உடல் நலக் குறைவால் இளைஞர்கள் உயிரிழப்பு

நண்பர்களுடன் மது விருந்து
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், கே.வி.பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பண்டவடிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்திருந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற இவர், மணிகுமார், ஷ்ரவண், வேணு, சிவமணி, அபிஷேக் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
மது அருந்திய போது , புஷ்பராஜ் மற்றும் மணிகுமார் என இருவருக்கு கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சக நண்பர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு, கர்ணமிட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மணிகுமார் வழியிலேயே உயிரிழந்து விட்டார். புஷ்பராஜ் பீலேரில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார்.
மது அருந்திய இடம் ஆய்வு
இரு இளைஞர்களின் மரணம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்தையடுத்து கல்கடா காவல் ஆய்வாளர் லட்சுமண்ணா தலைமையிலான போலீஸ், மற்றும் கலால் துறை அதிகாரிகள் மது அருந்திய இடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மணிகுமாருக்கு, நாகசிவராணி என்ற மனைவியும், ஒன்றரை வயது மகனும் உள்ளனர். புஷ்பராஜ் எம்.பி.ஏ. படித்தவர், அவரது தந்தை கோவிந்து சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்த நிலையில், அவரது மறைவு தாய் சரோஜாவின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அன்னமய்யா மாவட்ட டிஎஸ்பி எம்.ஆர். கிருஷ்ண மோகன் கூறுகையில் ;
இந்த மரணங்கள் அளவுக்கு அதிகமான மது அருந்தியதாலேயே ஏற்பட்டிருக்கிறது. மணிகுமாரும், புஷ்பராஜும், நான்கு உறவினர்களுடன் கர்ணமிட்டாவில் உள்ள மதுபானக் கடையில் இருந்து 19 'பட்வைசர் டின் பீர்களை' வாங்கி, சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை மலைப் பகுதியில் அருந்தியுள்ளனர். மணிகுமாரின் தந்தை ஆவலுக்குண்டா நரசிம்முலுவின் புகாரின் பேரில், சந்தேகத்திற்குரிய மரணங்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீலேர் கலால் துறை, முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. குடித்த காலி பீர் டின்னுகளும், மீதமிருந்த உணவுப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடரும் என கூறியுள்ளார்.




















