சென்னையில் ஒரேநாளில் 626 வழக்குகள் பதிவு.. இதுதான் காரணமா?
கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக, சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், 235 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21-ந் தேதி காலை முதல் வரும் 6-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகனத் தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்த, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 220 இருசக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 235 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 364 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றைத் தடுக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் ஏற்பட்டது முதல் தமிழ்நாட்டில் கடந்தாண்டு முதல் கொரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பரவத் தொடங்கியது முதல் புதியதாக அமைந்த தமிழக அரசு மே மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியது.
தற்போது, பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு அனைத்து செயல்பாட்டிற்கும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சாலை விதிகளுடன் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 182 ஆக பதிவாகியிருந்தது. ஆனால், நேற்று சென்னையில் கொரோனா பாதிப்பு 189 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 5 சிறுமிகளிடம் அத்துமீறிய நபர்.. உடந்தையாக இரண்டு பெண்கள்.. சென்னையில் கொடூரம்!